வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அறிவித்துள்ள மின்சார வாரியம், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 21 பைசா வரை உயர்த்தியுள்ளது.
மின்கட்டண உயர்வு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்சார வாரியம், மத்திய அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பின்படி அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் மின் கட்டண உயர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால் அடுத்த மாதம் 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என மின்சார வாரியம் கூறியுள்ளது. இதனை ஆய்வு செய்து முதலமைச்சரின் உத்தரவுப்படி பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் கட்டண உயர்வின் அளவு 4.7 விழுக்காட்டிலிருந்து 2.18 விழுக்காடாக குறைக்கப்பட்டது என தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது
இந்த குறைந்த மின்கட்டண உயர்விலிருந்தும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 விழுக்காடு உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவால் வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது என்றும், வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மின்சார வாரியம் கூறியுள்ளது. அதேநேரத்தில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா