அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சொந்த தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகமெங்கும் அறிவிக்கப்படாமல் அரங்கேறும் திடீர் மின்வெட்டால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் வீதிகளில் வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே முடியாத அளவிற்குக் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், இத்தகைய அறிவிக்கப்படாத மின்வெட்டு அவர்களை வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டாலும் குறைவான மின் அழுத்தப் பிரச்சினையாலும், குழந்தைகளும் முதியவர்களும் அசௌகரியத்திற்கு உள்ளாவதோடு, வீட்டில் உள்ள மின்சாதப் பொருட்களும் பழுதாகி வருவதும் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர்கள் என்றைக்குச் சொன்னார்களோ, அன்று முதலே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டுகள் தொடர்வது, தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, பொதுமக்கள் படும் துயரங்களை அலட்சியமாக எதிர்கொள்ளாமல் மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




