தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்பராமரிப்புப் பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிக்கப்பட்டு விடும் என்றும், அதன் பிறகு முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படாது என்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவில்லை என குற்றம்சாட்டினார். 10 நாட்களுக்குள் பராமரிப்பு பணிகள் முடிக்கப்படும் எனவும், அதன் பின்னர் முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லை எனவும், கடந்த ஏப்ரல் மாத தரவுகள் படி மின்சாரத்துறை ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி கடனில் உள்ளது எனவும் செந்தில் பாலாஜி கூறினார்.







