ராஜபாளையம் அருகே விவசாயி மாரிமுத்து என்பவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தர ராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து விவசாயம் செய்து வருகிறார். பெட்ரோல் விலை உயர்வு இருப்பதாலும் மற்றும் மற்ற வாகனங்கள் அதிக எடை இருக்கும் என்பதால், உறவினர்களின் அறிவுரைப்படி அதிக பாரமில்லாத பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை தனது மகன் கண்ணன் பெயரில் கடந்த ஆண்டு வாங்கி உள்ளார்.
வாகனத்தின் விலை ரூ.70,000 மற்றும் இதர செலவுகள் சேர்த்து ரூ.1 லட்சம் வரை ரொக்கமாக கொடுத்து வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அவர் இரு சக்கர வாகனத்தில் அருகே உள்ள நியாய விலைக் கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென வாகனத்தில் இருந்து புகை வந்த சில நொடிகளில் வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
உடனடியாக அந்த இடத்திலிருந்து சற்று தள்ளி சென்றதால் மாரிமுத்து காயமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து அருகே உள்ள பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்துள்ளனர்.
இதுகுறித்து மாரிமுத்து விற்பனை நிலையத்தி தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் பல காரணங்களை கூறி அவர்கள் தன்னை அலைக்கழிப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.
ரா. கௌரி







