சிவகாசி அருகே நடுவப்பட்டி கிராமத்தில், கட்டுமான பணியின்போது வீட்டின் உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான மாரிமுத்து-க்கு புழுகம்மாள் என்கிற மனைவியும்
3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து தனக்கு சொந்தமான காலி இடத்தில்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீடு கட்டும் பணியை தொடங்கினார். இந்நிலையில் அவரது வீட்டில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பணி முடிந்து சிமெண்ட் கலவை எந்திரத்தை அந்த இடத்திலிருந்து தள்ளிச் சென்றபோது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் மாரிமுத்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது உடன் பணியாற்றிய மேலும் 2 தொழிலாளிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த திருத்தங்கல் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த 2 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூபி.காமராஜ்







