4 மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால பொதுச் செயலராக பொதுக் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டப்படி சென்னை வானகரத்தில் இன்று காலை 9.15 மணிக்கு பொதுக் குழு கூட்டம் கூடியது.
அப்போது, 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் வரவு-செலவு கணக்குகளை சரிபார்க்கும் அதிகாரமும் இபிஎஸ்-க்கு மட்டுமே உண்டு என்று முடிவு எடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கழக சட்ட விதி 20அ-ஐ மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் கழக பொதுச்செயலாளர் என்று விதி திருத்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. துணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் துணை பொதுச்செயலாளர் என்று விதி மாற்றப்பட்டுள்ளது.
துணை பொதுச் செயலாளரை பொதுச் செயலாளரே நியமனம் செய்வார். அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு இன்று முதல் நீக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி மாற்றத்தக்கதல்ல என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
பொதுச் செயலாளருக்கான அதிகாரம் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா, கழக பொதுச் செயலாளர், அதிமுகவை காத்திட்ட தலைவர் எடப்பாடியார் என கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டனர்.







