முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது -முத்தரசன்

பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம்
மாறியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 20வது மாநில மாநாடு இன்று தொடங்கி மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் கேரள தொழில் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ள
இருக்கின்றனர். மேலும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இன்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏஐடியூசி மாநில தலைவர் சுப்பராயன் மற்றும் பொதுச் செயலாளர் மூர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தொழிற்சங்க கொடியேற்றி வைத்து நினைவு ஜோதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மாநாட்டை தொடக்கி வைத்தனர்.
பின்னர் மாநாட்டில் முத்தரசன் பேசும்போது, வாஜ்பாய் உள்பட மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த அனைவரும் பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினர். ஆனால் பிரதமர் மோடி எட்டு ஆண்டு கால ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனங்களை கூட உருவாக்கவில்லை என பேசினார்.
மேலும், ஏற்கனவே இருந்த அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்கிறார். தொழிலாளிகள் மாணவர்கள் விவசாயிகள் உள்பட அனைவருக்கும் எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. தேசிய கல்வி கொள்கை என்கிற பெயரில் பட்டியல் இனத்தவர்கள்
பிற்படுத்தப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் கல்வி மறுக்கப்படும் வாய்ப்புள்ளது என கூறினார்.
அத்துடன், டெல்லியில் விவசாயிகள் போராடி, 200 விவசாயிகளை பலிகொடுத்து வேளாண் சட்டத்தை திரும்ப பெற செய்தார்கள். ஆனாலும் அப்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, கருப்பு பணம் மீட்பு என கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மறந்து விட்டனர். தற்போது தேர்தல் நெருங்குவதால் வேலை வழங்குவதாக கூறுகின்றனர் என குற்றம் சாட்டினார்.
மேலும், மக்களுக்கு எதிராக மூர்க்கத்தனமாக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசாக ஒன்றிய அரசு உள்ளது. மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது. தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக மக்களை பிளவுபடுத்துகிறார்கள். ஒரே நாடு ஒரே மதம் எப்படி சாத்தியமாகும்? ஒருபோதும் முடியாது. நம் நாடு பல மதங்களை கொண்ட நாடு 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன 4600க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன மொழி மத சாதி வேறுபாடுகளுக்கு மத்தியில் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசம் என உலக நாடுகள் நம்மை போற்றுகிறது என கூறினார்.
அத்துடன், இந்த அரசு ஆர்.எஸ்.எஸ் கரத்தில் உள்ளது. அதனுடைய மனு தத்துவத்தை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அமல்படுத்த எல்லா முயற்சிகளை சட்டப்பூர்வமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு தொழிலாளர்களை அணி திரட்ட வேண்டும். 2024 தேர்தலில் மோடி அரசை தோற்கடிக்க
முடியும் தோற்கடிக்க வேண்டும் என்று பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram