ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் போன உயிருக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என திராவிட கழகத் தலைவர் வீரமணி பேசியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திராவிட கழகத் தலைவர் வீரமணி, ஆன்லைன் விளையாட்டு குறித்த கேள்விகளை எழுப்பிய பின் விளக்கங்களை 24 மணி நேரத்திற்குள் அனுப்பிய பின்னும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அண்ணாமலைக்கும் திறந்திருக்கும் ஆளுநர் மாளிகை தமிழக அரசு சார்பில் அனுமதி கேட்ட சட்டத்துறை அமைச்சருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என பேசினார்.

மேலும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல் தட்டப்பட்டது தற்போது திறக்கப்பட்டிருக்கிறது மட்டும் போதாது கையெழுத்து போட்டு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அண்ணாமலைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், நேரம் ஒதுக்க தெரிந்த ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்திக்க நேரம் ஒதுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். திராவிட கழகம் சார்பில் போராட்டங்களை அறிவித்ததற்கு பிறகு தான் ஆளுநர் மாளிகையின் கதவு கொஞ்சம் திறந்திருக்கிறது என கூறினார்.
அத்துடன், திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றி விடக்கூடாது என்பதற்காக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அவர் ஆளுநராக இல்லாமல் அரசியல்வாதி போல சனாதன கொள்கைகளைப் பற்றி பேசி வருகிறார். இது திமுகவிற்கு மட்டுமல்லாமல் தமிழக மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக சட்ட மசோதாவில் கையெழுத்திட வேண்டும். முழுக்க முழுக்க அரசியல் சட்டத்திற்கு விரோதமாக உறுதிமொழிக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் வடிவம் மாறும். ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கறுப்புக்கொடி காட்ட நேரிடும். தமிழகம் அமைதியாக இருக்கும் சூழலில் அமலியை ஏற்படுத்த நினைக்கிறார்கள். நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம். எங்களது போராட்டம் அடுத்த கட்டமாகவும் தொடரும். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் இறப்பவர்களுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்.
அத்துடன், இன்னும் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் ஆளுநர் ஆர்எஸ்எஸ் காரர் போல பேசிக்கொண்டு , தேவை இல்லாமல் திராவிட சித்தாந்தங்களை ஆராய்ச்சி செய்து கொண்டு தன் கடமைகளிலிருந்து தவறுகிறார் என்றார்.