ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த மூதாட்டி – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி!

பி12 ஊசி செலுத்திய 10 நிமிடங்களிலேயே மூதாட்டி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல்
நிலையம் அருகே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தலைவலி, உடல் அசதி காரணமாக  கண்ணம்மாள் (வயது 70) என்ற மூதாட்டி இன்று காலை சென்றிருந்தார்.  நீண்ட நேரம் காத்திருந்த அவர் மருத்துவர் நிறைமதி என்பவரிடம் சிகிச்சை பெற்றார்.
மருத்துவர் மாத்திரைகளை எழுதி கொடுத்தப்போது, “உடல் அசதியாக உள்ளது  ஊசி போடுங்கள்” என கண்ணம்மாள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, மருத்துவர் B12 ஊசியினை செலுத்த பரிந்துரைத்ததின் பேரில் செவிலியர் ஆதித்யா, கண்ணம்மாளுக்கு B12 ஊசி போடப்பட்டதாக தெரிகிறது. ஊசி போட்ட சுமார் 10 நிமிடங்களில் கண்ணம்மாள் ஆரம்ப சுகாதார நிலைய வாசலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். உடனடியாக அவரை 108
ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

இது தொடர்பாக நியூஸ்7 தமிழ் செய்தியாளர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவர் நிறைமதியிடம் விளக்கம் கேட்ட போது ஊசி போட்டதை மறைத்தார். செய்தியாளர் தன்னிடம் உள்ள ஆதாரத்தை காட்டிய பின்பு தான் கண்ணம்மாளுக்கு ஊசி போட்டதை மருத்துவர் ஒப்பு கொண்டார். ஏன் ஊசி போட்டதை முதலில் மறைத்தீர்கள் என கேட்டதற்கு மேல் அதிகாரிகள் கூறியதால் ஊசி போட்டதை கூறவில்லை என மழுப்பலான பதிலை மருத்துவர் அளித்தார்.

இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  உயிரிழந்த கண்ணம்மாளுக்கு மகன் ஒருவர் களியனூர் பகுதியில் இருப்பதாகவும், கண்ணம்மாளின் மகள் பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. கண்ணம்மாள் தனியாக திருகாலிமேடு பகுதியில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தலைவலி மற்றும் உடல் அசதி காரணமாக துணை இல்லாமல் தனியாக (ATTENDER) வந்த கண்ணம்மாளுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

B12 ஊசியின் பயன்கள்:
வைட்டமின் B12 குறைபாட்டின் காரணமாக வரும் சோர்வு, பலவீனம், நரம்புப் பிரச்சனைகள், இரத்த சோகை போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.