ஐபிஎல் ரத்து: நாட்டுக்குத் திரும்பிய 8 இங்கிலாந்து வீரர்கள்!

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இதில் பங்கேற்ற எட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா காரணமாக, பலத்த எச்சரிக்கையுடன் நடந்து வந்தது.…

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இதில் பங்கேற்ற எட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா காரணமாக, பலத்த எச்சரிக்கையுடன் நடந்து வந்தது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் நடந்து வந்த இந்த தொடரில், பயோ பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு வீரர்கள் விளையாடி வந்தனர். இந்நிலையில் இந்த பாதுகாப்பு வளையத்தையும் மீறி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல்.பாலாஜி, பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி, சஹா, அமித் மிஸ்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எல்.பாலாஜியும் மைக் ஹஸியும் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். வரும் 15 ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு, இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளதால், கொரோனாவில் இருந்து மீண்டதும் மாலத்தீவு வழியாக மைக் ஹசி, ஆஸ்திரேலியா செல்வார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஐபிஎல் தொடர் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள், ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, ஜேசன் ராய், சாம் கர்ரன், டாம் கர்ரன் ஆகியோர் நேராக டெல்லி சென்று அங்கிருந்து லண்டனுக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஹீத்ரு விமான நிலையத்தில் வந்திறங்கியதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் இப்போது ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.