சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 20-ம் தேதி வரை அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் தவிர மற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளின் படி புறநகர் ரயில் நிலையங்களில் பயணிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி ரயில்வே ஊழியர்கள், தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் போலீசார், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் ஆகியோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
இ-வணிக நிறுவனங்களின் ஊழியர்கள், ஊடக நிறுவனங்களில் பணிபுரிவோர், அரசு, தனியார், கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், தனியார் பாதுகாப்பு பணி ஊழியர்கள் ஆகியோருக்கும் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் உரிய அலுவலக அட்டையை கொண்டு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் (மே 6 தேதி முதல் 20-ம் தேதிவரை முன்பதிவு பயணசீட்டுகள், முன்பதிவில்லாத பயண சீட்டுகள் பெறுவதற்கான மையங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் என்றும் தெற்கு ரயில்வே கூறி உள்ளது.







