எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகம் – தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு

அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகமாக அதனை கொண்டாடி வருகின்றனர்.   அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை…

அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகமாக அதனை கொண்டாடி வருகின்றனர்.

 

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

 

அப்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளதாகவும், ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிபலிப்பே பொதுக்குழு உறுப்பினர்கள் என வாதிட்டனர். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க வேண்டும் என வாதிட்டனர்.

 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், தனி நீதிபதி உத்தரவு செல்லாது என்றும் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், உற்சாகமடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் எடப்பாடி வீட்டின் முன்பு குவிந்து உற்சாக முழக்கங்களும் எழுப்பி வருகின்றனர். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறும்போது, வழக்கில் தீர்ப்பு மாறி மாறி வருவதால் இதனை ஏற்று கொள்ள முடியாது என்றும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே, பொதுக்குழு நடந்தபோது, இருதரப்பினரும் மோதி கொண்ட சம்பவம் எதிரொலியாக, தற்போது தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக வந்துள்ளது. இதனால் மீண்டும் இருதரப்பினருக்கு இடையே மோதல் போக்கு உருவாகுவதை தடுக்கும் வகையில் போலீசார் லத்தி மற்றும் தடுப்பு காவலுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.