முக்கியச் செய்திகள் தமிழகம்

தீரன் பட பாணியில் புனே சென்று திருடர்களை கைது செய்த போலீஸ்

தீரன் படபாணியில் வடமாநில இளைஞர்களை பிடிக்க, பூனா சென்ற கள்ளக்குறிச்சி போலீசார் மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி புதூரில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ண மகால் என்ற பெயரில் நகைக்கடை இயங்கி வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி நள்ளிரவு இக்கடையின், பூட்டை உடைத்த மர்மநபர்கள், உள்ளே புகுந்து 281 சவரன் நகைகள், 30 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து, அருகே இருந்த சோள காட்டினுள் சென்று, மூட்டை கட்டி கொண்டு அட்டைபெட்டிகளை தூக்கி வீசி சென்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ் பி பகலவன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.


தனிப்படை போலீசார் நகைக்கடை மற்றும் அருகில் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கடையில் இருந்த சிசிடிவி ஹாட் டிஸ்குடன் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அருகே இருந்த தமிழ்நாடு கிராம வங்கியின் கேமராக்களை ஆய்வு செய்தனர். அதையும் கொள்ளையர்கள் துண்டித்து விட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இருப்பினும் கொள்ளயடித்த 7 ம் தேதியின் முழு நேர காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலிசார், வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் நகைக்கடையை நோட்டமிட்டு சென்ற விஷயத்தை கண்டுபிடித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை கொண்டு ஆய்வு செய்ததில், அந்த வாகனங்கள் புதுச்சேரியில் இருந்து வாடகைக்கு எடுத்து வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மராட்டிய மாநிலம் பூனா மாவட்டம் அம்பி கிராமத்தை சேர்ந்த லாலா பூலா ரத்தோட், ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட், மாலுவாலு அஜய் பகவான் நானாவத், தக்காவே கிராமத்தை சேர்ந்த சர்னால் மத்யா நானாவத் என்பதும், இவர்கள் அனைவரும் புதுச்சேரியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றம் செய்துவிட்டு திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து கொண்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அதன் பிறகு திருப்பதியில் இருந்து தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு நகைகளை தனது குடும்பத்தினரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒன்றும் அறியாதது போல புதுச்சேரி மாநிலத்தில் சுற்றி திரிந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரிக்கு விரைந்த கள்ளக்குறிச்சி போலீசார் இருசக்கர வாடகை கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி, அவர்களின் செல்போன் எண்களை பெற்றனர். புதுச்சேரியில் காத்திருந்து, கையும் களவுமாக லாலா பூலா ராத்தோடை கைது செய்தனர்.

கொள்ளையடித்த நகைகளை மீட்கவும், மேலும் இருவரை தேடியும் மராட்டியம், குஜராத், ஆமதாபாத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது. கொள்ளையர்களை கடந்த 22 நாட்களாக வலைவீசி தேடி வந்தனர். ஆனால் சொந்த ஊருக்கு அவர்கள் வரவில்லை என்பதை அறிந்த போலீசார் மீண்டும் புதுச்சேரிக்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தினர்.

தீரன் பட பாணியில் ரயில் பயணம் செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க சென்ற போலீசார் துப்பு மட்டுமே கிடைத்து திரும்பினர். கொள்ளையர்கள் புதுச்சேரியில் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு செல்போன் டவர் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து பதுங்கி இருந்த, அஜய் பகவான் நானாவத், சர்னால் மத்யா நானாவத் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1½ கிலோ தங்க நகைகள் மற்றும் 17 கிலோ வெள்ளிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருடப்பட்ட 20 கிராம் நகையை புதுச்சேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டு அந்த நகையும் மீட்கப்பட்டது.

கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட் என்பவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவர் ரஜினிகாந்த் கைது

Halley Karthik

14 பிரிவுகளில் தேர்வாகியுள்ள ஸ்க்விட் கேம் – விருது பெறுமா ?

G SaravanaKumar

இந்தியாவின் இளம் வயது பெண் விமானி ஆயிஷா அசிஸ்!

Jeba Arul Robinson