விரக்தியின் உச்சத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி நிதி நிலை அறிக்கையை படித்து பார்க்காமல் கருத்துக் கூறியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: வரலாற்று சிறப்புமிக்க நிதி நிலை அறிக்கையை மிகச் சிறப்பாக நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கான நிதி நிலை அறிக்கை என மக்கள் பாராட்டுகிறார்கள்.
நிதி நிலை அறிக்கையை வாடிக்கத் தொடங்கிய உடனேயே எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். கேட்பதற்கு மனமில்லாமல் வெளிநடப்பு செய்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி மறைத்துவிட்டார். பொள்ளாச்சி சம்பவம் தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவத்தை மறைத்துவிட்டார். மிகமோசமான, மக்களுக்கு விரோதமான ஆட்சி முந்தைய எடப்பாடி பழனிசாமி ஆட்சி.
திருச்சியில் நடைபெற்ற சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். ஆனால் அந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் அதனை மறந்துவிட்டார் பழனிசாமி. மகளிருக்கு செல்போன்கள் வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதியில் தெரிவித்தார்கள், ஆனால் அதை நிறைவேற்றவில்லை.
85 சதவீத வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியிருக்கிறார். மகளிர் திட்டத்திற்கு மகளிர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. துரோகத்திலேயே தலைவராகனும்னு நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மகளிர் உரிமைத்தொகை அறிவிக்கமாட்டார்கள் என அவர் நினைத்திருக்கலாம்.
அண்மைச் செய்தி : திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
ஈரோடு கிழக்கில் மக்களை அடைத்து வைத்ததாக தெரிவித்துள்ளார். எடப்பாடியோடு செல்ல மக்களுக்கு மனமில்லை. கூவத்தூரில் யார் அடைத்து வைத்தார்கள்?. ஈரோடு கிழக்கில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என கூறியவர் அதிமுக வேட்பாளர் தென்னரசு. மேற்கு மண்டலம் தனது கோட்டை என மணல் கோட்டை கட்டி வைத்துள்ளார்.
அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு ரூ 1,000 கொடுத்தார் அண்ணாமலை. 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். நீட் தேர்வுக்கான மசோதா திருப்பி அனுப்பியதையே கடந்த ஆட்சியில் மறைத்தனர். நீட், சட்ட ஒழுங்கு குறித்து பேசுவதற்கு தார்மீக உரிமை கிடையாது.நம்பிக்கைத் துரோகி எடப்பாடி பழனிசாமி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுதான் அதிமுகவிற்கு மக்கள் கொடுத்த நிலை. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.







