ஈக்வடார் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நாடாளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது. இதற்கு முன், வில்லவிசென்சியோ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.அதனால் அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ புதன்கிழமை இரவு தலைநகர் குய்ட்டோவில் பேரணியில் ஈடுபட்டு திரும்பிய போது பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால், ஈக்வடார் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. 59 வயதான பத்திரிக்கையாளர் வில்லவிசென்சியோ ஆகஸ்ட் 20 அன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான எட்டு வேட்பாளர்களில் ஒருவர். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன.
குயிட்டோவில் அரசியல் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு விட்டு தனது காரில் ஏற சென்ற போது வில்லவிசென்சியோ மீது சில அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் அவரை நோக்கி தலையில் சுட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாசோ கவலை தெரிவித்துள்ளார் . அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது கவலையே அவரது மனைவி மற்றும் மகள்களை எபப்டி தேற்றுவது என்பது தான். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்ஹஸாயம் கொலையாளிகள் தப்பமாட்டார்கள் என்று உறுதியளிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
Indignado y consternado por el asesinato del candidato presidencial Fernando Villavicencio. Mi solidaridad y mis condolencias con su esposa y sus hijas. Por su memoria y por su lucha, les aseguro que este crimen no va a quedar impune.
El Gabinete de Seguridad se reunirá en…
— Guillermo Lasso (@LassoGuillermo) August 10, 2023
ஊழலை ஒழிப்பதற்காக பேரணி நடத்தப்பட்டது;
ஈக்வடாரில் மக்கள் தேர்தலுக்கு வாக்களிக்க தயாராகி வரும் நிலையில், அங்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம், ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாசோ, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய தொடர்ச்சியான கொலைகளுக்குப் பிறகு மூன்று மாகாணங்களில் அவசரகால நிலை மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அதன் பிறகு ஊழலை ஒழிப்பதற்காக பத்திரிகையாளர் வில்லவிசென்சியோவின் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபப்ட்டிருந்தனர். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அவர் இந்த பிரச்னையை முன்னெடுத்து சென்றது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் அழிவைக் குறைப்பதிலும் முழுக் கவனம் செலுத்தினார்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டு கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்டதாக வெளியான வீடியோவில், கொலையாளிகள் எப்படி சரமாரியாக சுடுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. துப்பாக்கிச் சூட்டின் போது காயமடைந்த சந்தேக நபரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். படுகாயமடைந்த அவரும் குய்டோவில் உள்ள அட்டர்னி ஜெனரல் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரும் இறந்துவிட்டார். அவரது மரணம் தீயணைப்பு துறையினரால் உறுதி செய்யப்பட்டது. சடலத்தை கைப்பற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









