இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறி இருப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் சர்வதேச மத சுதந்திரம்-2021 அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென், இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்திய அலுவலர்களில் சிலர் இதுபோன்ற தாக்குதல்களை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், அதுமட்டுமின்றி ஆதரிக்கவும் செய்வதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாக்கு வங்கி அரசியலை சர்வதேச விவகாரங்களுக்குப் பயன்படுத்துவது எதிர்பாராதது என தெரிவித்துள்ள அவர், தவறான தகவல்களின் அடிப்படையில் ஒரு சார்பாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இயற்கையான பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியா, மத சுதந்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கிறது என அரிந்தம் பக்சி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நிகழும் இன ரீதியிலான தாக்குதல்கள், வன்முறைகள், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து, அந்நாட்டுடனான விவாதங்களின்போது, இந்தியா தனது கவலைகளை தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.









