உலக அளவில் பெரிய நிகழ்வுகள் எது நடந்தாலும், அதன் தாக்கத்தால் இறுதியில் பாதிக்கப்படுவது விளிம்பு நிலை மக்கள் தான். இந்த கூற்றை மெய்ப்பிக்கிறது கொரோனா காலம்.
கொரோனா காலத்திற்கு பிந்தைய வேலை வாய்ப்புச் சந்தை குறித்து பார்க்கலாம்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு பின் ஏற்பட்ட பேரழிவில் சிக்கிக் கொண்ட மக்கள், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆனது. இப்போது 2 ஆண்டுகள் உலகைப் புரட்டி போட்ட, கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, உலகின் பல நாடுகளில் பொருளாதார மந்தநிலைக்கான சமிக்ஞைகள் தெரிகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையின் தாக்கத்தால் இந்தியப் பொருளாதாரம், வர்த்தகம், முதலீட்டுச் சந்தை, வேலைவாய்ப்பு என பல துறைகள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக வல்லரசு நாடுகளில் நிலவிவரும் மந்தநிலை அச்சம் பெரும் பாதிப்பை இந்தியாவுக்கு உருவாக்கி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை, சேவைத் துறை பிஎம்ஐ குறியீடு, ரூபாய் மதிப்பு, வர்த்தகப் பற்றாக்குறை குறித்த தரவுகள் வெளியாகியுள்ளது.
சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (CMIE) அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் படி நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மே மாதத்தில் 7.12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது
கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பால் ஜூன் மாதத்தில் பெரும் பாதிப்புக்கு வழிவகுத்துள்ளது.
கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவீடு மே மாதத்தில் 6.62 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 8.03 சதவீதமாக உயர்ந்தது. அதே நேரம் நகர்ப்புற வேலையின்மை ஜூன் மாதத்தில் 8.21 சதவீதத்திலிருந்து 7.30 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை 8 மில்லியன்கள் அதிகரித்தது. ஜூன் மாதத்தில் 13 மில்லியன் குறைந்து 390 மில்லியனாக இருந்தது. ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 13 மில்லியன் வேலைகள் இழப்பு ஏற்பட்டாலும், தொழிலாளர் சந்தையில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் மட்டுமே உயர்ந்துள்ளது என்று CMIE இன் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறுகிறார்.
இந்தியாவின் சேவைத் துறை ஜூன் மாதம் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜூன் மாதம் சேவைத் துறையின் PMI குறியீடு 59.2 புள்ளிகளை எட்டியுள்ளது. இது சமீப காலங்களில், பதிவான அதிகப்படியான அளவீடாகும்.
சேவைத் துறையில் இருக்கும் நிறுவனங்கள் பணவீக்கம் அதிகமாக இருக்கும் இந்த வேளையிலும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகளவு வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. சேவைத் துறை குறியீடு 11 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.
நிதி சார் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிந்து வருகிறது. வல்லரசு நாடுகளில் உலகப் பொருளாதார மந்தநிலை வருமா என்ற அச்சம், தொடர்வதால் முதலீட்டுச் சந்தையில் அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகிறது.
ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதியின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஒரு வருடத்திற்கு முன்பு 9.61 பில்லியன் டாலரில் இருந்து தற்போது 25.63 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தத் தடாலடி உயர்வுக்கு ரூபாய் மதிப்பின் விழ்ச்சியும் முக்கியக் காரணம். கொரோனா உலகையே தலை கீழாகப் புரட்டிப் போட்டுள்ளதை மறுக்க முடியாது.








