5 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்ட தயாராகுங்கள் என பிரதமர் மோடி அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இமாச்சல் பிரதேசம், தர்மசாலாவில் நேற்று தலைமைச் செயலாளர்களுக்கான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து
விவாதிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகம், பயிர் மாற்றம் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை உணவுப்பொருட்களில் தன்னிறைவை அடைதல் மற்றும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளி மற்றும் உயர்கல்வி நிலையங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதேபோல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும், வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நிறைவுரையாற்றி முடித்து வைத்தார். தனது உரையில், “ஒவ்வொரு மாநிலமும் தனது பலத்தை உணர வேண்டும். தேசத்தின் 5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கான இலக்கையும், அதனை அடைவதற்கான செயல்முறையையும் வடிவமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.