சினிமா பாணியில் நடந்த திருப்பம்; கொலை செய்ய முயற்சித்தவர் உயிரிழப்பு

வேளாங்கண்ணி அருகே  திருமணத்தை தாண்டிய உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சினிமா பாணியில் திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டவரே பலியான பலியாகியுள்ளார்.  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆசிரியர் குடியிருப்பு, பார்வதி மந்திரம் தெருவை சேர்ந்தவர்…

வேளாங்கண்ணி அருகே  திருமணத்தை தாண்டிய உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சினிமா பாணியில் திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டவரே பலியான பலியாகியுள்ளார். 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆசிரியர் குடியிருப்பு, பார்வதி மந்திரம் தெருவை சேர்ந்தவர் வில்லியம் மகன் வினோத் விக்டர் (36). கப்பல் ஊழியரான வினோத் விக்டருக்கு வேளாங்கண்ணி மாதா குளம் அருகில் விடுதி சொந்தமான உள்ளது. இந்த விடுதியை வேளாங்கண்ணி ஆர்ச் தெருவை சேர்ந்த ராமராஜன் மதன் கார்த்தி என்பவர் ஒரு வருட காலத்திற்கு குத்தகை எடுத்து நடத்தி வந்துள்ளார்.

வினோத் விக்டர் கப்பலில் வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவி மரியா ரூபினா மார்ட்டினா என்பவருக்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த மதன் கார்த்தி என்பவருக்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. வினோத் விக்டர் சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணிக்கு வந்து, மதன் கார்த்திக்கிடம் ஒரு வருட கால குத்தகைக்காலம் முடிந்ததால், விடுதியை காலி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். விடுதியை ஒப்படைக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வினோத் விக்டர் வீட்டில் நேற்று காலை காலை புகுந்த மதன் கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் வினோத் விக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேளாங்கண்ணி போலீசார் காயம் அடைந்த வினோத் விக்டரை மீட்டு நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்து வினோத் விக்டர் நேற்று இரவு தனது காரில் வேளாங்கண்ணியை சேர்ந்த ஓட்டுனர் ஆல்வின், மற்றும் தனது மனைவி மரிய ரூபினாவுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

நாகை-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி சுனாமி நினைவு தூண் அருகே வினோத் விக்டர் வந்த காரை ஓட்டுநர் ஆல்வின் நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதனையடுத்து வினோத் விக்டர் மனைவி மரியா காரை விட்டு இறங்கி ஓரமாக சென்று விட்டார். மதன் கார்த்தி மற்றும் அவரது நண்பர் செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அமுதன் 28 உள்ளிட்டார் வினோத் விக்டரை தாக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மதன் கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கார் கண்ணாடியை உடைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதில் சுதாரித்துக் கொண்ட வினோத் விக்டர் சினிமா பாணியில் தானே காரை ஓட்டிக்கொண்டு தப்பித்து சென்றுள்ளார்.

ஆனாலும் விடாமல் துரத்திய மதன் கார்த்திக்கும் அவரது நண்பரும் வேளாங்கண்ணி மெயின் ஆர்ச் மாரியம்மன் கோயில் அருகில் வினோத் விக்டர் சென்ற காரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். வினோத் விக்டர் சென்ற காரின் முன்புறம் சென்ற மதன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் அமுதன் என்பவரும், காரை வழிமறிக்க
முயற்சித்துள்ளனர். அப்போது, வினோத் விக்டர் தப்பித்து செல்வதற்காக தனது காரை
இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். இதில் மதன் கார்த்திக் மற்றும் அவரது
நண்பர் அமுதன் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் இடது கை மற்றும் இடது மார்பு ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த மதன்கார்த்தி மற்றும் அமுதன் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மதன் கார்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த மதன் கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அமுதன் பலத்த காயங்களுடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கார் ஓட்டி வந்த வினோத் விக்டர் வலது கண்ணில் ரத்தக்காயத்துடன், காருடன்
நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார். அவரையும் காவல்துறையினர் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் வினோத் விக்டரின் மனைவி மரிய ரூபினாவிற்கும் மதன் கார்த்திக்கிற்கும் திருமணத்திற்கு முன்பே காதல் இருந்து வந்ததாகவும், இவர்கள் காதலை அறிந்த மரிய ரூபினரின் வீட்டினர் வினோத் விக்டருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பின்பும் தங்களின் காதலை நீட்டித்து வந்த நிலையில் விக்டர் வினோத்துக்கு இவர்களின் திருமணத்தை தாண்டிய உறவு தெரிய வரவே கடந்த இரண்டு மாதமாக பிரச்சனை இருந்து வந்ததாகவும், நேற்று விக்டர் வினோத்தை கொலை செய்வதற்காக திட்டமிட்டு மதன் கார்த்திக்கின் நண்பரை கார் டிரைவர் ஆக அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.

மேலும் மதன் கார்த்திக் விரித்த வலையில் மதன் கார்த்திக்கே உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. சினிமா பாணியில் திட்டமிட்டு நடைபெற்ற இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.