கோவையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அதிமுக உறுப்பினரை கத்தியால் ஒருவர் குத்திய சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், தோலம்பாளையம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (50), அதிமுக உறுப்பினர். வெள்ளியங்காடு, காரமடை பகுதியைச் சேர்ந்தவர் பத்திரசாமி (35). இவர்கள் இருவரும் வெள்ளியங்காடு அரசு மதுபான பாரில் நேற்று இரவு 8.45 மணிக்கு மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, குடிபோதையில் மகேஷ் குமார் கெட்ட வார்த்தையால் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து, பத்ரசாமி எதற்காக இப்படி கெட்ட வார்த்தை பேசுகிறாய் என கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆத்திரமடைந்த பத்ரசாமி பாரை விட்டு வெளியே வந்து மகேஷ்குமாரை கையால் அடித்தும், பீர் பாட்டிலை உடைத்து மகேஷ் குமாரின் இடது பின் பக்க விலா எழும்பில் இரண்டு இடத்தில் குத்தி ரத்த காயமும் ஏற்படுத்தி உள்ளார். காயமடைந்த மகேஷ்குமார் காரமடை சௌமியா மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பத்ரசாமியை காரமடை காவல் துறையினர் பிடித்து வந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள். இவருக்கு இடது கை கட்டைவிரல் மற்றும் தலையில் லேசான ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா