முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

11-ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வா? டாக்டர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

கல்லூரி மாணவர் சேர்க்கைக்கே நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தும் திமுக அரசு, 11-ஆம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த ஆணையிடுவது எந்த வகையில் நியாயம்? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் சேர, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்திருக்கிறார். இது சமூகநீதிக்கு எதிரானது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 10 முதல் 15% மாணவர்களை சேர்க்கலாம்; அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு இணையாகவோ, அதைவிட குறைவாகவோ விண்ணப்பம் பெறப்பட்டால், நுழைவுத் தேர்வின்றி மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பிரிவை ஒதுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட பாடத்தில் 50 வினாக்களைக் கொண்ட, சரியான விடையை தேர்வு செய்யும் முறையிலான, நுழைவுத் தேர்வை சம்பந்தப்பட்ட பள்ளி அளவில் நடத்தி, மாணவர்களை தேர்ந்தெடுக்கலாம் என பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் ஆணையிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்த பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வுகள் நடத்தப் படக்கூடாது என்பது தான் தங்களின் கொள்கை என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. கல்லூரி மாணவர் சேர்க்கைக்கே நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தும் திமுக அரசு, 11-ஆம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த ஆணையிடுவது எந்த வகையில் நியாயம்? சமூகநீதிக்கு எதிரான இத்தேர்வை எப்படி ஏற்க முடியும்?

தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் 22.03.2021 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பில் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை நீதிமன்றம் எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது அனைத்து பள்ளிகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்த அரசு துடிப்பது தவறு. இது மாணவர் நலனுக்கு எதிரானதாகும்.

எந்தப் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான் தங்களின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறுகிறார். மற்றொருபுறம் அரசு பள்ளிகளில் 11&ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கிறது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? இதுதான் சமூகநீதியை பாதுகாக்கும் வழியா?

பள்ளிப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி, தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு ஏற்படுத்தி விடக்கூடாது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்புக்கு கடந்த ஆண்டு எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதோ, அதே போல் நடப்பாண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!

Jayapriya

வாக்களித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

’என் வீட்டுத் தோட்டத்தில்…’ நடிகர் சிவகார்த்திகேயனின் பசுமை தோட்டம்!

Gayathri Venkatesan