முக்கியச் செய்திகள் தமிழகம்

இரட்டை கொலை, 1,000 சவரன் நகை கொள்ளை – குற்றவாளி சிக்கியது எப்படி?

சென்னையில் பணம் மற்றும் தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு முதிய தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ஶ்ரீகாந்த், (வயது 60) அவரது மனைவி அனுராதா (வயது 55) என்பவருடன் சேர்நது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வசிக்கும் மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்க்க சென்றுள்ளனர். நேற்று அதிகாலை ஶ்ரீகாந்த் தனது மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து ஶ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை காரில் அழைத்து வர அவர்களின் டிரைவர் கிருஷ்ணா சென்றுள்ளார்.  சஸ்வத் தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட போது ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்பு கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட போது முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சஸ்வத் தனது உறவினர் ரமேஷ் பரமேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்து மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். உடனே அவர் தனது நண்பர் ஶ்ரீநாத் என்பவருடன் சேர்ந்து மயிலாப்பூரில் உள்ள ஶ்ரீகாந்த் வீட்டிற்கு சென்றபோது, வீட்டில் சூட்கேஸ் திறக்கப்பட்ட நிலையில் லாக்கரிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து E-1 மைலாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றவாளி தமிழகத்தை விட்டு நேபாளம் தப்பி ஓடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர போலீசாரின் உதவியோடு சென்னை போலீசார் கார் டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ஆகிய இருவரை இன்னோவா காருடன் மடக்கிப்பிடித்து சென்னை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், இருவரும் தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு ஶ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரையும் கொலை செய்து, வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்ததும், அவர்களின் சடலங்களை  ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நெமிலிச்சேரி பண்ணை வீட்டில் புதைத்து விட்டு காரில் தப்பியதாகவும் தெரிவித்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 1,000 சவரன் தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப்பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் இன்னவோ கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  கொலையாளிகள் இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை ஈ சி ஆர் கிழக்கு கடற்கரை சாலையில் சூளேரிக்காடு என்ற பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் இருவரும் புதைக்கபட்டிருப்பதாக கிடைக்க பெற்ற தகவலையடுத்து, தனிப்படை மூலம் சம்பவ இடத்தை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு விசாரணை கைதிகளை கொண்டு வந்து இடத்தை அடையாளம் காண்பித்த போது, புதைக்க பட்ட இடம் தோண்டபட்டு சடலங்கள் வெளியே எடுக்கப்பட்டன. பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

பணம் மற்றும் நகைகளுக்கு ஆசைப்பட்டு விசுவாசமாக வாழ்ந்த வீட்டிற்கே துரோகம் விளைவித்து, கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கான டெண்டர் தொடக்கம்: ஆர்டிஐ தகவல்!

புதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!

Halley Karthik

மதுரை அருகே தாய் தந்தையே மகனை கொன்ற கொடூரம்

Arivazhagan CM