சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய, சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால், துணை நடிகர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66 வது பொதுக் குழு கூட்டம் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சாந்தோமில் நடைபெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், நடிகர் சங்கத்தின் தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணி கைப்பற்றியது.
இந்த நிலையில் மீண்டும் தலைவர் பதவிக்கு வந்துள்ள நாசர் தலைமையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டமானது சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. சங்க நிர்வாகிகளான விஷால் , பூச்சி முருகன் கருணாஸ் குஷ்பு பொன்வண்ணன் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கும் நடிகர் சங்க கட்டடத்தை, மீண்டும் கட்டி முடிக்க வசதியாக, நிதி திரட்ட பொதுக்குழு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மேடையில் பேசிய நடிகர் விஷால், ஆறு மாதம் இருந்திருந்தால் நடிகர் சங்க கட்டடத்தை அப்போதே முடித்திருக்கலாம் என்றார். தேர்தலுக்கு பின் வழக்கறிஞர் உள்ளிட்ட செலவுகளை தவிர்த்திருந்தால் அந்த தொகையை கட்டடம் கட்ட, உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க பயன்படுத்தியிருக்கலாம் என்றும், துணை நடிகர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பின்னர் பேசிய கார்த்திக், நடிகர் சங்கம் கட்டடம் கட்ட தேவையான தொகையை வங்கி கடன் மூலம் திரட்ட ஒப்புதல் பெறப்பட்டது.ஆரம்பத்தில் 31 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டன. அதில் 70% வேலைகள் முடிவடைந்துள்ளது. அதற்கு மட்டும் 19.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறினார்.
Advertisement: