இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த், ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்ததை அடுத்து, சர்வதேச போட்டிகளில் அவர் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றவர் டூட்டி
சந்த். இவரிடம் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை, ஊக்கமருந்து சோதனை நடத்தியது. அப்போது, டூட்டி சந்த்தின் மாதிரிகளில், பல தடை செய்யப்பட்ட பொருட்கள் கலந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 26 வயதான டூட்டி சந்த், சர்வதேச போட்டிகளில் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் நீண்ட தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த சோதனை மற்றும் தடையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள டூட்டி சந்த், தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது எனவும், இதுபற்றி எந்த விதமான தகவல்களும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், எந்த வகை பரிசோதனை மூலமாக இது உறுதி செய்யப்பட்டது என தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனலட்சுமி உள்ளிட்ட பலருக்கு இவ்வாறு உறுதி செய்யப்பட்டபோது, WADA அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்து தகவல் தெரிவித்ததாக கூறிய அவர், தனக்கு இதுவரை எந்தவிதமான தகவலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.







