முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

வட இந்தியாவில் களமிறங்கிய தமிழக எம்.பி ; சூடான அரசியல் களம்

தமிழகத்தை தாண்டி திமுக வேறு எங்கும் அரசியல் செய்யாது என்ற நிலையை கடந்த சில மாதங்களாக மாற்றி வருகிறார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின். நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதி, ஓபிசி அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும் என ஸ்டாலின் கூறி வருகிறார். இந்த சூழ்நிலையில் தமிழக எம்.பி ஒருவர், வட இந்தியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி உதவி வருகிறார். அவர் வேறு யாருமல்ல நமது தருமபுரி எம்.பி. செந்தில்குமார்தான் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

டாக்டர் செந்தில் குமார் என்றாலே தெரியாதவர்கள் இல்லை என்ற அளவிற்கு தமது உதவும் கரங்களால் தமிழகம் முழுவதும் பிரபலமாக உள்ள இவர், அப்படி என்ன செய்துவிட்டார் ? இவரை பற்றி பேசுவதற்கு என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பே. பொதுவாக சமூக வலைதளங்கள் மூலம் உதவி என கோரிக்கை விடுப்பவர்களுக்கு ஓடோடி உதவி வருகிறார். அது அவரது அரசியல் லாபத்திற்காக செய்கிறார் என்று எண்ணுபவர்களுக்கு அவரே பதில் அளிக்கிறார்.

‘எங்க தாத்தா டி.என்.வடிவேல் அறுபதுகளில் பால் வியாபாரம் செய்து வந்தார். அப்போது தன்னிடம் உதவி என கேட்பவர்களுக்கு, பணம் கொடுக்காமல் மாடுகளை கொடுப்பார். இதன்மூலம் அவர்களுக்கு நிரந்தர வருமானம் வரட்டுமே என்பதே அவரது எண்ணமாக இருந்தது என்கிறார் டாக்டர் செந்தில்.

இதனை அறிந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான காமராசர், எங்க தாத்தாவை காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு நேரில் வந்து அழைப்பு விடுத்தார். அப்போது எங்க தாத்தா அவரிடம் வைத்த ஒரே கோரிக்கை, தருமபுரியை எங்கள் மாவட்டத்திற்கு தலைநகராக்க வேண்டும். ஏனெனில் பின் தங்கியுள்ள எம் மாவட்ட மக்களுக்கு, அது ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்றார். காமராசரும் சம்மதித்தார். தாத்தாவும் தேர்தலில் வென்றார். ஆனால் அன்றைய முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம், பெங்களுருக்கும், தமிழகத்திற்கும் இணைப்பு பாலமாக கிருஷ்ணகிரி விளங்குவதால், தருமபுரியை மாவட்டத் தலைநகராக அறிவிக்க முடியாது என்கிறார்.

உடனே எங்கள் தாத்தா வடிவேல் தனது பதவியை ராஜினமா செய்கிறேன் என காமராசருக்கு தகவல் அனுப்பினார். அதனை கேட்ட காமராசர், அதெல்லாம் தேவையில்லை, தருமபுரியை மாவட்டத் தலைநகராக அறிவிக்க ஏற்பாடு பண்ணுகிறேன் என்றார். அதன்படி செய்தும் கொடுத்தார். அந்த வகையில் பார்க்கும்போது நான் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. எங்க தாத்தாவின் புகழ்தான் என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப உதவியாக இருந்தது என்கிறார் செந்தில் குமார்.

இதுவரை உள்ளூர் மக்களுக்கு உதவிய நீங்கள் இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளவர்களுக்கும் உதவுகிறீர்களே, என்ன அரசியல் கணக்கு என்று கேட்டபோது, ‘என்னிடம் உதவி என கேட்டு வருபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் என்றால் நானே என் தனிப்பட்ட வருமானத்தில் இருந்து உதவி விடுவேன். அதற்கு மேல் என்றால் சமூக வலைதளம் மூலம் கிரவுடு பண்டிங் என்ற முறையில் நண்பர்கள் பலரின் உதவியோடு உதவி வருகிறேன். மத்திய பிரதேசத்தில் 11 வயது பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சமூக வலைதளம் மூலம் அறிந்தேன். அவர்களுக்கு உதவுவதற்காக கடந்த 10 நாட்களாக கடும் முயற்சி மேற்கொண்டு, தற்போதுதான் உதவியுள்ளேன். இதில் அரசியல் நோக்கம் ஒன்றும் இல்லை என்றார்.

ஏற்கனவே திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் டெல்லி அரசியல் பக்கம் அதிக கவனம் செலுத்தி வரும் சூழ்நிலையில், டாக்டர் செந்தில், வட இந்தியர்களுக்கு உதவும் பணியை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

இராமானுஜம்.கி

Advertisement:
SHARE

Related posts

பேரறிவாளன் விடுதலை; நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதல் நொடிகள்

Arivazhagan CM

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பிரமுகர்கள்

Arivazhagan CM

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

Saravana