முக்கியச் செய்திகள் செய்திகள்

சிஎஸ்கே வெற்றியை பாதித்ததா மின்வெட்டு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல்.இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை, மும்பைக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனால், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியைப் பொருத்தவரை பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பொல்லார்டுக்கு நேற்று பிறந்தநாள். எனவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்ட் களத்தில் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் களத்தில் இறக்கப்படவில்லை. பொல்லார்டுக்கு பதிலாக ஸ்டுப்ஸ் களமிறங்கினார்.

மேட்ச் ஆரம்பித்த வேகத்திலேயே பவர் பிளேக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்தது. கடந்த சில போட்டிகளில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் தேவான் கான்வே. ஆனால், நேற்று இந்த மைதானத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது கான்வேயுடைய விக்கெட்தான். போட்டி தொடங்கிய முதல் 10 பந்துகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்தனர். இந்த 3 விக்கெட்டுகளுக்கு சென்னை அணி டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை.

கான்வே, மொயின் அலி, உத்தப்பா ஆகியோர் அவுட்டாகினர். இதில் மொயின் அலி கேட்சில் அவுட் ஆகினார். கான்வே, உத்தப்பா எல்பிடபிள்யூவில் அவுட்டாகினர். கான்வே போட்டியின் முதல் ஓவரிலேயே அவுட்டாகினார். அவரால் டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. கான்வே எல்பிடபிள்யூவில் அவுட்டாகவில்லை. இருந்தாலும் அவர் டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை என்கிற ஒரு மோசமான நிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து வந்த பிளேயர்களும்  பிரெஸர் காரணமாக அவுட்டாகினர். முதல் கோணல் முற்றிலும் கோணல் எனும் நிலை ஏற்பட்டது.

மைதானத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக டிஆர்எஸ் எடுக்க முடியாது எனக் கூறப்பட்டது. மைதானத்தில் உள்ள மற்ற இடங்களில் மின்சாரம் இருந்தபோது, டிஆர்எஸ் எடுப்பதில் மட்டும் என்ன சிக்கல் எனும் கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். உலகத்திலேயே மிகப்பெரிய  ப்ரீமியர் லீக் என கூறப்படும் ஐபிஎல்.இல் பவர்கட் என்பதால் டிஎஸ்ஆர் எடுக்க முடியாது எனக் கூறுவது மோசமான முன்னுதாரணமாக உள்ளது என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.

கான்வேயின் விக்கெட்டில் விடப்பட்ட ஆட்டத்தை சென்னை அணியால்  மீட்டெடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தவண்ணமே இருந்தன. கேப்டன் தோனி மட்டுமே களத்தில் நிதானமாக நின்று ஆடிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு எதிரில் வந்த எந்த பேட்ஸ்மேனுமே அவருக்கு உதவவில்லை. இதனால், சென்னை அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர்.

இந்த ரன்னை மும்பை இந்தியன்ஸ் எளிதில் சேஸ் செய்துவிடுவார்கள் என நினைத்தனர். ஆனால், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மும்பை அணியின் விக்கெட்டுகளும் சரியத் தொடங்கின. சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங்  சிறப்பாக பந்து வீசினர். இதன் காரணமாக பவர் பிளேக்குள் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

மும்பையுடன் ஒப்பிடும்போது சென்னை அணிக்கு பந்து வீச்சுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகத்தான் இருந்தது. சென்னையைப் பொருத்தவரை முகேஷ்சவுத்ரி, சிமர்ஜித் சிங், பிராவோ மட்டும்தான் இருந்தனர். இதில், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங் பவர்பிளேயில்  பந்து வீசுபவர்கள். பிராவோ டெப்த் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். அதனால் அவரால் முதல் பத்து ஓவர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை. ஸ்பின்னர்களாலும் நேற்று பெரிய அளவில் எதுவும் செய்ய முடியவில்லை. மும்பை அணி 14 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு ஸ்கோரை எளிதாக சேஸ் செய்துவிட்டனர்.

இந்த மோசமான தோல்வி காரணமாக சென்னை அணியின் பிளே ஆஃப் கனவு முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டது. இந்த தோல்வியைத் தோண்டி  மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள விஷயம் சென்னை பேட்டிங் செய்யும்போது முதல் 10 பந்துகளில் டிஆர்எஸ் இல்லை என்பதுதான்.

கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் “இரு அணிகளுக்கும் ரூல்ஸ் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். பவர் கட்டாக இருந்திருந்தால் போட்டியைத் தாமதமாக தொடங்கியிருக்கலாம். அல்லது இரு அணிகளுக்கும் டிஆர்எஸ் இல்லை என்கிற விதியை கொண்டு வந்திருக்க வேண்டும். இது இரண்டுமே இல்லாமல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் டிஆர்எஸ் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழக விஞ்ஞானிக்கு சர்வதேச விருது!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம்

Saravana Kumar

ஊரடங்கு நீட்டிப்பா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

Ezhilarasan