நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை தலைநகரின் 200 வார்டுகளில் 153 வார்டுகளை திமுக வென்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலானது பலத்த எதிர்ப்பார்ப்புகளுடன் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் அமையும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை முதலே வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாடு முழுவதும் திமுக வேட்பாளர்கள் பலர் முன்னிலையிலும், வெற்றியையும் பெற்றுவந்தனர். தேர்தல் நடந்த 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான அணைத்து வார்டுகளிலும் திமுக ஆதிக்கம் செலுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான வெற்றிகளை பெற்றதுடன், தலைநகர் சென்னையிலும் திமுக பெருவாரியான வார்டுகளை வென்று தனிப்பெரும் சக்தியாக வலம் வருகிறது. சென்னையின் மொத்த 200 வார்டுகளில் 153 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மொத்தமாக 178 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளான அதிமுக 15 வார்டுகளையும், சுயேட்சை 5 வார்டுகளையும், அமமுக மற்றும் பாஜக கட்சிகள் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெருவாரியான இடங்களை வென்றதுடன் திமுக தலைநகரையும் வென்றுள்ளது தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.







