காங்கிரஸ் கட்சிக்காக தமிழக மக்களின் நலனை அடமானம் வைக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்………!

திமுக அரசு, தமிழகத்தின் உரிமையை காக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார்.

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் போவதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தனது நிதிநிலை அறிக்கையில் கூறியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியுடனான தனது கூட்டணியை திமுக உறுதி செய்த அடுத்த தினமே, கர்நாடக காங்கிரஸ் அரசு இதனை அறிவித்திருப்பது, தனது கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க, திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதை வெளிப்படையாக்கியிருக்கிறது.

தமிழகத்தின் உரிமையை காக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுகவின் நலனுக்காக, தமிழகத்தின் உரிமையைப் பலிகடா ஆக்க முடியாது. தமிழக மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் இது. உடனடியாக, தனது கூட்டணிக் கட்சித் தலைவரான கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சருடன் பேசி, மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.