திமுக எங்கள் சித்தாந்த எதிரி- அண்ணாமலை

பாஜகவை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறது. திமுகவுடன் தேர்தல் களத்தை எதிர்த்து சந்திக்க பாஜக தயாராக உள்ளது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஒருநாள் பயணமாக சென்னை வந்திருந்த…

பாஜகவை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறது. திமுகவுடன் தேர்தல் களத்தை எதிர்த்து சந்திக்க பாஜக தயாராக உள்ளது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஒருநாள் பயணமாக சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் கூட்டணி, வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் வரலாறு காணாத நிகழ்வு நடைபெற்றுள்ளது. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நேற்றைய தினம் பிரதமர் திண்டுக்கல் வந்திருந்தார். அதேபோல் நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். இரண்டு நாட்கள், இவர்கள் இருவரும் இங்கு வந்தது மிகுந்த ஊக்கத்தை எங்களுக்கு கொடுக்கிறது என்றார்.

கொட்டும் மழையிலும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமரை பார்க்க குவிந்திருந்தனர். அதனை உடனடியாக பார்த்த பாரத பிரதமர் காரில் இருந்து வெளியே வந்து அனைவரையும் கை காட்டி நெகிழ்ச்சிபடுத்தினார். அப்போது, பிரதமர் எந்த அளவு நமது தமிழக மக்களிடையே அன்பு வைத்திருக்கிறார் என்பதை பார்க்க முடிந்தது. வரும் 19ம் தேதி காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக மக்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமரும் அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்பேன் என கூறியுள்ளார். நேற்றைய தினம் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது 14,00,000 பேர் வணக்கம் மோடி என்ற ட்வீட்டை பதிவிட்டிருந்தனர். இது கடந்த முறையை விட 2 மடங்கு பெரியதாகும்.

இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியா சிமெண்ட்ஸ் விழாவில் பேசும் போது, உலகத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ்மொழி என்று கூறியுள்ளார். 2010ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் தொழில்வழி கல்வியை கொண்டுவந்தோம். அமித்ஷாவை பொறுத்தவரை நமது தாய்மொழியை தான் பிரதானமாக வைக்க வேண்டும் என்பதே நோக்கம். பொறியியல் படிப்பை தமிழ்வழியில் கொண்டு வர வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார்.

அமித்ஷா பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார் என்பதே செய்தி. மாறாக யாரும் கட்சியில் இணையவில்லை. அவ்வாறு தவறான தகவல் பரவியிருந்தால் உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட காவல்துறை நண்பர்கள் நமது கட்சியினர் மீது தவறான முறையில் நடந்து கொண்டனர். அதன்காரணமாக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பாஜகவை எதிரியாக பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறோம். திமுகவுடன் தேர்தல் களத்தை எதிர்த்து சந்திக்க பாஜக தயாராக உள்ளது.

பேரறிவாளன் குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அன்று ஒன்று, இன்று ஒன்று என இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. இன்றைக்கு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் அது வேறு, இது வேறு என்று கூறி இருக்கின்றன.

10 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக எதுவுமே தெரியாமல், தன் பிராமண எதிர்ப்பை மட்டுமே வைத்து அரசியல் செய்து வருகிறது. கேரளாவிற்கு தகுந்தார் போல ewsஐ மாற்றியமைத்து செயல்படுத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கூட இந்திய அளவிலும், கம்யூனிஸ்ட் கட்சியும் இதனை ஆதரிக்கிறார்கள். ஆனால் திமுக, அதன் ஒரு சில கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டு அனைத்துக் கட்சி கூட்டம் என சொல்வது வேடிக்கையானது. இதில் அதிமுக, பாஜக பங்கேற்கவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றாலும், இதனை கண்ணை மூடிக்கொண்டு திமுக எதிர்க்கிறது.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை எங்கள் நிலைபாட்டில் எந்த குழப்பமும் இல்லை.  மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து எங்கள் பாராளுமன்ற குழு பேசி முடிவெடுக்கும். ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டு மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.