முடிவுக்கு வந்தது 31 ஆண்டுகால சிறைவாசம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி  சுமார் 31 ஆண்டுகளாக சிறையிலிருந்த நளினி உள்ளிட்டவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் சென்னை…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி  சுமார் 31 ஆண்டுகளாக சிறையிலிருந்த நளினி உள்ளிட்டவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர். இவர்களில் பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ந்தேதி  உச்சநீதிமன்றம் 142வது சட்டப்பிரிவில் தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது.

இந்நிலையில் தங்களையும் இதே போன்று விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நளினி மற்றும் ரவிச்சந்திரன் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.காவை, பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு, ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

உத்தரவு நகல்கள் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறைகளுக்கு கிடைக்கப்பெற்றநிலையில் இன்று 6 பேரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் பெண்கள் சிறையிலிருந்து நளினியும், ஆண்கள் சிறையிலிருந்து நளினியின் கணவர் முருகனும் விடுதலை செய்யப்பட்டனர். இதே போல் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  சாந்தனும் 31 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இதே போல் சென்னை புழல் சிறையிலிருந்து ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தனது தாயார் அற்புதம்மாளுடன் சென்று சிறை வாயிலில் வரவேற்றார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில்  முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கை தமிழர்கள் என்பதால் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.