’லவ் டுடே’ இயக்குநரை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

’லவ் டுடே’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ’லவ் டுடே’. இப்படத்தில் கதாநாயகியாக இவானா…

’லவ் டுடே’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார். 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ’லவ் டுடே’. இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2k கிட்ஸ் காதலையும் செல்ஃபோன் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மையமாக வைத்து நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி வெளியானது.

பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன்பு இயக்கிய கோமாளி திரைப்படத்தை போலவே இந்த படத்திலும் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2k கிட்ஸ் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அறிமுக நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வசூல் செய்வதில்லை என்ற பிம்பத்தையும் இந்த படம் உடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் தரமான படைப்புகள் வெளியானால், அதனை கண்டு ரசித்து படக்குழுவினரை நேரில் வரவழைத்தோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோ வாழ்த்து தெரிவித்து பாராட்டுவது வழக்கம்.

இந்நிலையில் ’லவ் டுடே’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் வரவழைத்து, பாராட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன், “நான் இன்னும் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. மனதிற்கு இதமாக இருந்தது. அந்த இறுக்கமான அணைப்பு, கண்கள், சிரிப்பு, நடை மற்றும் காதல். ஆகா, என்ன ஒரு ஆளுமை. இன்று லவ் டுடே படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். நீங்க சொன்ன வார்த்தைகளை மறக்க மாட்டேன் சார்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.