முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”பட்டியலின மக்களை திமுக வஞ்சிக்கிறது” – அண்ணாமலை கண்டனம்

பட்டியலின மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய அரசு, ஆண்டுதோறும் பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக, மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் நிதி, பட்டியல் பிரிவு மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்திட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் எஸ்சிஎஸ்பி (SCSP) திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, முந்தைய ஆட்சிக் காலத்தில் (2016-2021) சுமார் 2900 கோடி பயன்படுத்தப்படாமல் இருந்து வந்திருக்கிறது, திமுக ஆட்சியில், 2021-2022 ஒரு ஆண்டிலேயே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 2418 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்திருக்கும் செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் 2022-23 நிதி ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான தகவலின்படி மத்திய அரசு தமிழகத்தின் பட்டியிலின சகோதர சகோதரிகளுக்கு ஒதுக்கிய 16,442 கோடி ரூபாய் நிதியில், தமிழக அரசு 10,466 கோடி ரூபாய் செலவிடாமல் உள்ளது என்ற செய்தியை கேட்டு மீண்டும் ஒருமுறை அதிர்ச்சிக்குள்ளானேன்

கல்வி, வீட்டு வசதித் திட்டங்கள், வேலைவாய்ப்பு, நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாகப் பயன்படுத்தாமல் இருப்பது, திமுக அரசின் மெத்தனத்தையும் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மக்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது.

தமிழக பட்டியல் இன சகோதர சகோதரிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சில, மாநில பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான ஆணையத்தில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லாததும், மாநில அரசிடம் இருந்து நிதி சரிவர ஒதுக்கப்படாததும்தான் என  செய்திகள் வெளிவந்திருக்கின்றன. பல மாவட்டங்களில் பட்டியல் இன மக்கள் வாழும் கிராமங்களில், கழிப்பறை வசதிகள் கூட அமைத்துத் தரப்படவில்லை என்ற செய்திகளும் நாளிதழ்களில் வெளிவந்திருக்கின்றன.

இவை தவிர, தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள், அடிப்படை வசதிகளே இல்லாத அவல நிலையில் இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பட்டியல் பிரிவு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை சரிவர வழங்கப்படாமல் இருக்கிறது. ஆதிதிராவிட நலத் துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை.

செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் எத்தனையோ இருக்க, அவற்றைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல், மத்திய அரசு வழங்கும் நிதியையும் பயன்படுத்தாமல், தொடர்ந்து பட்டியல் பிரிவு சகோதர சகோதரிகளை வஞ்சித்து வருகிறது திறனற்ற திமுக. இது மட்டுமல்லாது, பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மற்ற திட்டங்களுக்குப் பயன்படுத்துவதாகவும் திமுக அரசின் மேல் குற்றச்சாட்டு உள்ளது.

அண்மைச் செய்தி : “என் மீது வைத்த குற்றச்சாட்டினை 3 நாட்களில் அமீர் நிரூபிக்க வேண்டும்” – இயக்குனர் மோகன் ஜி

இதுதொடர்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டபோது, இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதாக அலட்சியமாகப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர். பொதுமக்கள் மேல், திமுகவின் அக்கறை இந்த அளவில்தான் இருக்கிறது. பெயரளவில் சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, பட்டியல் இன சகோதர சகோதரிகள் முன்னேற்றத்துக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களைச் செயல்படுத்த திறனற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோச்சிங் சென்டர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி சோமு கேள்வி

G SaravanaKumar

தென் கொரியாவில் கால்பதிக்கும் விக்ரம் திரைப்படம்

Niruban Chakkaaravarthi

“அறிவியல் பயிற்சி: பன்னாட்டு நிறுவனத்தை மறுபரிசீலனை செய்க” – அன்புமணி

Halley Karthik