சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பெரியகுளம் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது எனக் குற்றம்சாட்டியதோடு, தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார். ஆனால் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. கண் துடைப்புக்காகவே ஏ.கே.ராஜன் குழுவை அமைத்துள்ளனர் என்ற பழனிசாமி, கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றார்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்ததாகவும், தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் கூறினார்.
மேலும், கொரோனாவை தடுக்க திமுக அரசு புதிதாக எதுவும் செய்யவில்லை என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் செய்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை அவர்கள் பின்பற்றினார்கள் அவ்வளவுதான் எனவும், சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








