திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது- அண்ணாமலை

திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது. ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாகவும், ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.…

திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது. ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாகவும், ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வட்டார இந்துசமுதாயம் மற்றும் ஆலய நிர்வாகங்கள் சார்பிலும் 19வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், சட்டமன்றத்தில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ராமாயணம் என்பது கற்பனை கதை எனவும், ராமர் கட்டுகதை எனவும் கூறி இந்துமக்கள் மனதை புண்படுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருத்து வெற்றி பெற்று சென்ற காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் இந்து மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கும் வரை பிரச்சினையை விடபோவதில்லை என்று கூறினார்.

தனக்கு வழங்கபட்ட இசட் பிரிவு பாதுகாப்பு குறித்த கேள்விக்கு, என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நுண்ணறிவு காவல்துறையினரின் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும், ஏன்? எதற்காக வழங்கபட்டது என மத்திய அரசிடம் கேட்கபோவதில்லை எனவும், அதேவேளையில் கட்சியில் செய்ய வேண்டிய பணியில் பாதிப்புகள் ஏற்படகூடாது என நினைப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதி ஒருவர் உயிரிழந்திருப்பது வருத்ததிற்குரியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினரிடையே துக்கம் மறைவதற்கு முன்பாக இடை தேர்தல் நடத்த திமுக அரசு அவசரபடுகிறது. மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு திமுகவிற்கு இல்லை.

தனியார் துறையில் ஆண்டிற்கு பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கபடும் எனவும், அரசுதுறையில் 3.5லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கபடும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த 20 மாதங்கள் ஆகியுள்ளது. மொத்த ஆட்சியில் 3ல் ஒரு பங்கு முடிந்துள்ள நிலையில் இதுவரையிலும் வேலை வாய்ப்புகளை வழங்கபடவில்லை.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு நடைபெற்று 6 மாதங்களாகியும் அதன் முடிவுகளை வெளியிடாத அரசு எப்படி வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். திமுகவுக்கு எப்போதும் எதிரி வேண்டும். திரைப்பட அரசியல் படி திரைபடத்தில் நடிகர்களுக்கு வில்லன்கள் இருப்பது போல், திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது. ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாகவும், ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கை. திமுகவிகனர் ஆளுநரை சீண்டி வருகின்றனர்.

மேற்குவங்கம் கேரளாவை போல் ஆளுநர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்தால் அரசின் மானம் நிலைகுலைந்துவிடும். தொடர்ந்து ஆளுநரை திமுக சீண்டிக் கொண்டு இருந்தால் ஆளுநர் அமைதி காப்பார என்பதை கூற இயலாது. 2024 தேர்தலில் பாஜக கொள்கை சார்ந்த கூட்டணி அமைக்கும். திமுகவை போல் சந்தர்பவாத கூட்டணி அமைக்காது. பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை ஆகியவைகளில் பிரச்சினை இருக்க தான் செய்கிறது. எனினும் ஒரே கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கபடும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.