ஓபிஎஸ் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – வி.கே சசிகலா

சட்டசபையில் ஓபிஎஸ் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர் என வி.கே சசிகலா விமர்சித்துள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து…

சட்டசபையில் ஓபிஎஸ் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர் என வி.கே சசிகலா விமர்சித்துள்ளார்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்து வருகின்றனர். அந்த வகையில் வி.கே.சசிகலா தனது இல்லத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியில் நான் எல்லோருக்கும் பொதுவானவர். கால நேரம் வரும்போது அனைவரும் ஒன்றிணைவோம்.

தேர்தல் காலங்களில் எதிர்கட்சி என்பதை வெளிப்படுத்தி மக்களிடம் ஆதரவு கேட்போம். அவர்களும் நாம் அளிக்கும் வாக்குறுதியை நம்பி வாக்களிப்பார்கள். மக்கள் ஆட்சியை கொடுத்த பிறகு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆனால் திமுக ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். மக்களுக்காக வந்த அரசாக இந்த அரசு தெரியவில்லை. 5 ஆண்டுகாலம் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என செய்கின்றனர்.

ஆளுனர் மோதலை பெரிதாக மாற்றுவதை விட்டு விட்டு, மக்களுக்காக நல்லதை செய்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அதிமுக உட்கட்சி பூசலை திமுக பயன்படுத்தி வருகிறது. அனைவரும் ஒன்று சேரக்கூடாது என திமுக செயல் பட்டு வருகிறது. கொடநாடு வழக்கை அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருகிறது. இந்த வழக்கு இப்போதைக்கு முடியாது. இந்த சண்டையை பெரிதாக்கி பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க நினைக்கின்றனர்.

சட்டப்பேரவையில், ஓபிஎஸ் தீர்மானம் குறித்து பேசுகிறார். உடனடியாக அதிமுகவை சேர்ந்த நபர்கள் எப்படி பேச விடலாம் என கேட்கின்றனர். அதற்கு சபாநாயகர் முன்னாள் முதல்வர் என்ற முறையில்தான் பேச சொன்னேன் என கூறுகிறார். ஆனால் அவர் அதிமுக அதனால் தான் பேச சொன்னேன் என கூறவில்லை. இதிலிருந்தே தெரிகிறது, ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகின்றனர் என்பது. திமுக எப்போதும் இரண்டு வண்டியில் மட்டுமே பயணம் செய்பவர்கள் என விமர்சனம் செய்தார்.

மேலும், அதிமுகவில் நான் சாதியை பார்க்கவில்லை. நான் சாதியை பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராகியிருப்பேனா? என கேள்வி எழுப்பியவரிடம், ஓ பி எஸ் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் செல்வீர்களா ? சந்திக்க நேரம் கேட்டால் தருவீர்களா? என பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் தருவேன். மாநாட்டுக்கு அழைத்தால் அது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.