ஸ்ரீபெரும்புதூரில் சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு வீட்டின் முன்னே
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் முன் கதவை திறந்து விலையுயர்ந்த ஆடியோ பிளேயரை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 13-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் திமுகவை சேர்ந்த குமார். இவர் தனது ஃபார்ச்சூனர் சொகுசு காரை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று திரும்பி வந்து பார்த்த பொழுது காரின் கதவு திறந்தும் இன்டிகேட்டர் இயங்கிய நிலையிலும் இருந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ந்து போன குமார், காருக்குள் பார்த்த பொழுது சுமார் ரூ.50,000 மதிப்புள்ள ஆடியோ பிளேயர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும்
காரின் அருகே இருந்த சிசிடிவி கேமராவை பார்த்த பொழுது கேமரா மேல்பக்கமாக
திருப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு
தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
—ம.ஶ்ரீ மரகதம்







