திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் தொடக்கம்

திமுகவின் உட்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி, கொரோனா காரணமாக தற்போது…

திமுகவின் உட்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி, கொரோனா காரணமாக தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் கிளை கழகத் தேர்தல் முழுவதுமாக ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. மாவட்ட அவைத் தலைவர், செயலாளர், 3 துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகின்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுகவின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கின்றனர். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் கலை உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, அதிமுக ஆட்சியின் போது எந்தவொரு அரசு பதவியில் இல்லாமல் கட்சிக்காக உழைத்த பழைய திமுக நிர்வாகிகளுக்கு, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உட்கட்சிப் பொறுப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும், இளைஞரணியைச் சார்ந்த நிர்வாகிகள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.