தமிழ்நாட்டில் கற்றல் இடைவெளியை இல்லம் தேடி கல்வி திட்டம் குறைத்துள்ளதாக கலிபோர்னியா பல்கலைகழக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் நிகழ்வுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடைப்பெற்றது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களிடம் கைப்பேசிகள் இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை காணப்பட்டது. இதனை சரிசெய்ய தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கு அருகே ஒரு பகுதியில் சிறிய அளவிலான எண்ணிக்கை கொண்ட மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழையெளிய மாணவர்கள் மிகுந்த பயனடைந்தனர்.
இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பள்ளி குழந்தைகளின் கற்றல் இடைவெளி குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு 2019ம் ஆண்டில் 220 கிராமங்களில் 2 முதல் 7 வயதுக்குட்பட்ட 19,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் அறிவாற்றல் சோதனையை உள்ளடக்கியது. தொடர்ந்து, டிசம்பர் 2021லிருந்து ஒப்பிடக்கூடிய மதிப்பீடுகளைப் பயன்படுத்தி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட உடனேயே மற்றும் ஏப்ரல்-மே 2022 இல், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் முரளிதரன் கூறுகையில், கொரோனா தொற்றுக்கு முந்தைய மற்றும் அதற்கு பின் உள்ள காலகட்டத்தில் பள்ளிக் கற்றல் குறித்து ஆராயப்பட்டது. இந்த ஆய்வில் டிசம்பர் 2021 இல், கற்றல் இழப்பு பாதியளவில் இருந்ததாகக் கிடைத்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 1 முதல் 2 ஆண்டுகள் பள்ளிகளில் கற்றதற்கு சமமாக இல்லம் தேடி கல்வி திட்டம் கற்றல் இடைவெளியை குறைத்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் சுமார் 18 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. அப்போது எடுத்த தரவுகளின் அடிப்படையில், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கணிதத்தில் 11 முதல் 15 மாதங்கள் வரை பின்னடைவும், தமிழைப் பொறுத்தவரை, 9 வயது குழந்தைகளில் 22 மாதங்கள் பின்னடைவு காணப்பட்டது.
மே 2022 இல், இளம் மாணவர்களுக்கு அந்த ஆண்டின் தொடக்கத்தில் நேரில் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு, கற்றல் இழப்பில் மூன்றில் இரண்டு பங்கு மீண்டதாக ஆய்வு தெரியவந்துள்ளது. அதோடு கணிதம் மற்றும் தமிழ் மதிப்பெண்கள் இரண்டும் மேம்பட்டுள்ளது.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் 50 சதவீத கற்றல் இழப்பை மீட்டெடுக்கும் அதே வேளையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் ஒரு தீர்வுத் திட்டமாகவும், இந்த மீட்சிக்கு பங்களிப்பதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வின் படி 92 சதவீதம் குழந்தைகள் வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அதிக மாணவர்களின் வருகை பதிவாகியுள்ளது. பின்தங்கிய பிரிவை சார்ந்த மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர் என்பது இந்த ஆய்வில் தெரிய வருகிறது. தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் கல்வி பின்னடைவின் மீட்சிக்கு 24 சதவீதம் இல்லம் தேடி கல்வி திட்டம் பங்காற்றியுள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.







