திமுக – காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளே வரும் சட்டமன்றத் தேர்தலில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட 50 தொகுதிகள் வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான திமுக குழுவுடன் காங்கிரஸ் தரப்பிலிருந்து உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, நல்ல முறையில், மகிழ்ச்சிகரமாக பேசினோம், இரண்டு தரப்பும் அவரவர் கருத்துகளை தெரிவித்தோம், இரண்டு தரப்பும் அவரவர் கட்சியுடன் பேசியபிறகு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தெரிவித்த கருத்துகளை ஆழ்வார்ப்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் தெரிவித்தனர். இதுபோலவே, தேனாம்பேட்டை தனியார் விடுதியில் காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவினர் தனியாக ஆலோசனை நடத்தினர். மீண்டும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.