அரியலூரில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரை திமுகவில் இணைத்துக் கொண்டார்கள் என்பதற்காக நாங்கள் திமுகவை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டையோ அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையோ மட்டும் மனதில்கொண்டு நான் பேசவில்லை. என்னுடைய பார்வை முழுவதும் தேசிய அளவிலானதாகும்” என்று திருமாவளவன் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும். அந்த அணியில் திமுகவும் இருக்க வேண்டும், த.வெ.க-வும் இருக்க வேண்டும். கொள்கை எதிரிகள் ஒன்றிணைய வேண்டும். தமிழ்நாட்டில் திமுக மற்றும் த.வெ.க இடையே அரசியல் ரீதியாகப் பலத்த போட்டி மற்றும் எதிர் நிலைபாடுகள் இருந்தாலும், தேசிய அளவில் பாஜகவின் அரசியலையும் மதவாதத்தையும் வீழ்த்த, கொள்கை எதிரியான த.வெ.க-வும், தொடர்ந்து பாஜகவை எதிர்த்து வரும் திமுகவும் ஒரே அணியில் (இந்தியா கூட்டணியில்) பயணிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம். என்னுடைய இந்த தேசிய அளவிலான பார்வையைத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலோ அல்லது ஊடகவியலாளர்களாலோ எளிதில் புரிந்துகொள்ள முடியாது.
‘திருமாவளவன் என்ன குழப்புகிறார்,
அவருக்கு என்ன ஆச்சு?’ என்று கேட்பார்கள்.
ஆனால், அது அவர்களின் புரிதலில் உள்ள சிக்கலே தவிர, என் பார்வையில் உள்ள சிக்கல் அல்ல” என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா கூட்டணியில் சேர திமுகவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று பதிலளித்தார். அதேபோல, “உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று வைகோ கூறியிருக்கிறாரே? என்ற கேல்விக்கு , “அவருடைய பரிந்துரைக்கு எனது நன்றிகள். நோபல் பரிசு கிடைத்தால், கண்டிப்பாக அவருக்கு நன்றி சொல்வேன்” என்று பதிலளித்தார்.




