கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசியதாக ‘யூ- டியூபர்’ திருநாவுகரசு உட்பட எட்டு பேரை கைது செய்து, காவால்துறையினர் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கும் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர்களுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகியது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு, ‘சம்மன்’ அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதே போல் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கும் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.




