மத்திய அரசை கண்டித்து, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் – டீசல் – சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க இளைஞரணி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைகோ , சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா , டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்புக் கொடி ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் எம்.பி. கனிமொழி மற்றும் அசோக் நகர் விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.








