தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் – பிரேமலதா வீடியோ வெளியீடு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும், விரைவில் முழு உடல்நலத்துடன் அவர் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும், விரைவில் முழு உடல்நலத்துடன் அவர் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.  அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு  வருகிறார்.

கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால்,  அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது எனவும், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் இன்று மாலை மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் நலம்பெற அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் விஜய்காந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/iVijayakant/status/1729888947982193130

அந்த வீடியோவில் விஜயகாந்த நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மாலை வெளியான அறிக்கை வழக்கமாக மருத்துவமனையில் இருந்து வெளியிடப்படும் அறிக்கை தான் எனவும், விரைவில் முழு உடல் நலத்துடன் அவர் வீடு திரும்புவார் எனவும் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். முழு உடல் நலத்துடன் அவர் மக்களை விரைவில் சந்திப்பார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.