கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்குவோருக்கு ஜாக்பாட்: கிராமுக்கு ரூ.10,000 ஆக உயர்வு..

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வரம்பு கிராமுக்கு ரூ.10,000 ஆக உயர்வு, வட்டி விகிதங்களையும் சீரமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டது.

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான விதிமுறைகளை மாற்றி அமைத்து, கூட்டுறவுத்துறை புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் சாமானிய மக்களுக்குக் கூடுதல் கடன் தொகையும், வட்டி குறைப்புச் சலுகைகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், நகைகளின் சந்தை மதிப்பில் 75% அல்லது கிராம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.7,000 மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய புதிய உத்தரவின்படி, நகைக் கடன்களுக்கான ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ.10,000/- வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75% என உயர்த்தப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே இதுவரை பெரும் வேறுபாடு நிலவி வந்தது. இதனைச் சீரமைக்கும் வகையில் கூட்டுறவுத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) விதிக்கும் வட்டி விகிதத்தை விட, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் (PACCS) பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டி வீதம் குறைந்தது 1.25% குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், PACCS-ன் லாப வரம்பு (Margin) 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12%-ல் இருந்து 13% ஆக உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது இனி புதிதாகப் பெறப்படும் நகைக் கடன்களுக்கும் மட்டுமன்றி, ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுத் தற்போது புதுப்பிக்கப்படும் (Renewal) நகைக் கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டைத் துணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ளார். பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில் எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த அறிவிப்பு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.