ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ஹிஜாவு எனும் தனியார் நிதி நிறுவனமானது பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு மாதம் 15 சதவீதம் வட்டி அளிப்பதாக பொய்யான வாக்குறுதி அளித்து, சுமார் 89,000 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 4,620 கோடி ரூபாய் வரை வசூல் செய்தும் அதன்பின்பு முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை
இவ்வழக்கில் ஏற்கனவே HIJAU நிறுவனத்தின் தலைவர் சௌந்தரராஜன், இயக்குநர்கள் நேரு, செல்வம், சுரேஷ், சந்திரசேகரம் பிரிஸிட்லா, கமிட்டி மெம்பர்களான குருமணிகண்டன், முகம்மது ஷெரீப், சாந்தி பாலமுருகன், கல்யாணி, பாரதிரவிச்சந்திரன், சுஜாதா பாலாஜி மற்றும் HJHU தலைமையலுவலகத்தின் பொதுமேலாளர் சுஜாதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, இந்நிறுவனத்தின் மற்றொரு இயக்குநரான கலைச்செல்வி மற்றும் அவரது கணவரும் HIJAU நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியும், மேலாண் இயக்குநருக்கு நெருக்கமான ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கடந்த 31.03.2023-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும், ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர் அலெக்ஸாண்டர் உள்பட 15 பேர் தலைமைறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி முன்பு, மனுமீட்க வேண்டிய தொகை அதிகமாக உள்ளதாலும், 16,500 பேரிடமிருந்து புகார்கள், 40 பேர் மீது வழக்கு என கூறி ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா







