”பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காததில் ஏமாற்றம்” – மல்யுத்த வீரர்கள் கைதுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்

நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது…

நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.

கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

”இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் போராட்டம் நடத்தி வருவதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடந்த சில நாள்களுக்கு முன்பு பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கைது செய்யப்பட்டதை உலக மல்யுத்த கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷண் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுகளை பாரபட்சமின்றி, நேர்மையாக விசாரிக்க வேண்டும். போராட்டம் நடத்தி வரும் வீரர், வீராங்கனைகளுடன் விரைவில் உலக மல்யுத்த கூட்டமைப்பு ஆலோசனை நடத்தும்” என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.