தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக கே.என். நேரு இருந்தபோது, நகராட்சித்துறையில் உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் ரூ.634 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக அமலாக்கத்துறை, தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த செப்டம்பர் 5-ந்தேதி கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போதும் ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது.
25 இடங்களில் அதிரடி சோதனை!
இதையடுத்து, இன்று காலை முதல் மீண்டும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 25 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. கே.என். நேருவின் வீட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை, சுமார் 8 மணி நேரத்துக்குப் பிறகு நிறைவடைந்தது. இதற்கிடையே, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டில் சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையும் முடிவடைந்தது. அங்கிருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆவணங்கள் பறிமுதல் செய்யவில்லை!
சோதனை நிறைவடைந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என். நேரு, “கடந்த முறையைவிட அதிகமான இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். ஆவணங்கள் எதையும் பறிமுதல் செய்யவில்லை. இரண்டு லேப்டாப்புகளை எடுத்துச் சென்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.
திசைதிருப்புவதற்காகக்கூட இருக்கலாம்!
தொடர்ந்து பேசிய அவர், “நிறைய இடங்களில் கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. சிறைவாசிகள் தப்பித்துச் செல்கிறார்கள். அதனால், இந்த ரெய்டு அவற்றையெல்லாம் திசைதிருப்புவதற்காகக்கூட இருக்கலாம்” என்று கூறினார்.
நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் வேலை செய்வார்கள்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு இதுபோன்ற சோதனை நடைபெறுகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த கே.என். நேரு, “நான் அப்படி நினைக்கவில்லை. நான் ஒருவன் இருந்தால்தான் ஜெயிக்க முடியும், இல்லையென்றால் ஜெயிக்க முடியாது என்றெல்லாம் கிடையாது. நான் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். நான் இல்லை என்றாலும் அவர்கள் வேலை செய்வார்கள்” என்று தெரிவித்தார்.
காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய்… தி.மு.க. நிலையாக இருக்கும்!
அரசியல் போட்டிகள் குறித்துப் பேசிய கே.என். நேரு, “காமராஜர் vs தி.மு.க., எம்.ஜி.ஆர். vs தி.மு.க., ஜெயலலிதா vs தி.மு.க., விஜய் vs தி.மு.க. என அந்தப் பக்கம் மாறிக்கொண்டே இருப்பார்கள்; தி.மு.க. நிலையாக இருக்கும்” என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீடு உள்ளிட்ட 25 இடங்களில் நடைபெற்ற சோதனை, அவர் அளித்த பேட்டி மற்றும் அரசியல் கருத்துகள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.




