தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய சங்பவங்கள் நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள புழல் சிறையில் கடந்த 20-ஆம் தேதி அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பி ஓடினர். இதுதொடர்பாக போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து ஒருவரை கைது செய்த நிலையில் மற்றொருவரை தேடி வருகின்றனர். இதன் காரணமாக சிறை காவலர்கள் மற்றும் ஒரு உதவி ஜெயிலர் என 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறையி கடந்த 26-ஆம் தேதி வலிப்பு வந்ததாக நடித்து சிறைக்காவலரை தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள் தப்பி ஓடினர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து போலீசார் 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு அனைவரையும் மீண்டும் கைது செய்தனர். இதன் காரணமாக பல்வேறு சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவ்விறு சம்பவங்களும் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தமிழ்நாட்டு மக்களில் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக பல்வேறு எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வந்தன.
இந்த நிலையில் தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி-ஆக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் மின்வாரிய லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கூடுதல் டி.ஜி.பி கே. சங்கர், சிறை மற்றும் சீர்திருத்தச் பணிகள் துறையின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.




