கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன், த்ரில்லர்.. ஜி.வி.பிரகாஷை இயக்குகிறார் சீனு ராமசாமி

ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக, சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். கூடல் நகர், விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கி…

ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக, சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

கூடல் நகர், விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கி இருப்பவர் சீனு ராமசாமி. இப்போது விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசை அமைத்துள்ள இந்தப் படம் விரைவில் சென்சாருக்கு செல்ல இருக்கிறது.

இதையடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதால், உடனடியாக அவர் நடிக்கும் படத்தை தொடங்க இயலவில்லை. இதனால் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார்.

இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ரகுநந்தன் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.

படம் பற்றி இயக்குநர் சீனு ராமசாமி கூறும்போது, ’இதுவரை, நான் இயக்கிய படங்களில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும். நான் ஆக்‌ஷன், த்ரில்லர் படங்களின் தீவிர ரசிகன். ஆனால் அதுபோன்ற படங்களை இதுவரை இயக்கியதில்லை. இப்போது கிராமத்து பின்னணியின் இந்தப் படத்தை இயக்குகிறேன். இந்தப் படத்தை முடித்துவிட்டு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன்’ என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.