மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரீகப் பூஜைகள் செய்வதாகக் கூறி ரூ.65லட்சம் மோசடி செய்த தேனி மாவட்டம் தேவதானபட்டியைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் நேற்று
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர்
புகார் மனு கொடுத்தார். அதில் தனது கணவர் 2003-ம் ஆண்டு முதல் மனநலம்
பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் இந்நிலையில் தேனி மாவட்டம்
தேவதானப்பட்டி ஆசாரி தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் அவருடைய மனைவி விஜி ஆகியோர் அவரது மாமியாரிடம் அறிமுகம் ஆகியுள்ளனர்.
அவர்கள் தனது கணவருக்கு நேரம் சரியில்லை என்றும், தேவதானப்பட்டியில் உள்ள கோவில் மற்றும் எங்களது வீட்டில் வைத்து பரிகாரப் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் தனது மாமியாரிடம் கூறினர். பரிகாரம் செய்வதற்கு பில்லி சூனியம், நடுராத்திரி பூஜை மற்றும் மலையாள குருஜி பூஜை போன்றவை செய்தால் உடல்நிலை மற்றும் மனநிலை சரியாகிவிடும் என்றார்கள். அதை நம்பிய எங்களிடம், கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் ஜோதி பரிகாரம், மாந்திரீக பூஜைகளுக்குப் பணம் வேண்டும் என்று கேட்டனர்.
இதனால் சந்திரசேகரன் மற்றும் அவருடைய மனைவியிடம் ரொக்கமாகவும்,
அவர்கள் கூறியதன் பேரில் பாண்டி ரமேஷ், ஆனந்த் என்பவர்களின் வங்கிக்
கணக்கிலும் பல்வேறு தேதிகளில் ரூ.65 லட்சம் வரை அனுப்பினோம். ஆனால் எனது
கணவரின் மன நல பாதிப்புக்கான எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் பணத்தை
திருப்பிக் கேட்டபோது அவர்கள் ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதன்பேரில், மாந்திரீகப் பூஜைகள் செய்வதாகக் கூறிப் பணம் மோசடி செய்ததாக சந்திரசேகரன், விஜி, பாண்டி ரமேஷ், ஆனந்த் ஆகிய 4 பேர் மீதும் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸ் (பொறுப்பு) அரங்கநாயகி வழக்குப்பதிவு செய்தார். இதில் சந்திரசேகரன், விஜி,
ஆனந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி
சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெ.வீரம்மாதேவி
மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரிகப் பூஜைகள் – 65 லட்சம் மோசடி
மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரீகப் பூஜைகள் செய்வதாகக் கூறி ரூ.65லட்சம் மோசடி செய்த தேனி மாவட்டம் தேவதானபட்டியைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…






